Thursday, 19 December 2019

மாறிவிட்டனரா மாணவர்கள்

மாணவர்கள் மாறிவிட்டனரா??
    ஆதி மாணவனாகிய    அர்ஜூனன்  முதல் தற்போதைய சுந்தர்பிச்சை காலம் வரை மாணவர்கள் அவர்களாகவே தானிருக்கிறார்கள்..மதிப்பீடுகள் தான் காலத்திற்கேற்ப மாற்றமடைகின்றது..ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் சந்திக்கும் மாணாக்கர்களிடம்  ஆசிரியர்,இந்த வருடம் மாதிரியான மோசமான மாணவர் வகுப்பை இதற்கு முன் பார்த்ததில்லையென்று உச்சரிக்க தவறமாட்டார்கள்..அதே ஆசிரியர் மாணவராக இருந்த பொழுதும் இந்த  வாக்கியத்தை கேட்டிருப்பார்..உண்மையை ஆராய்ந்தோமானால் மாணவர்கள் நம்மை விட அதிகம் தெரிந்தவர்களாக இப்பொழுது இருக்கிறார்கள் என்ற
உன்னதத்தை ஆசிரியர் மனம் அறிய மறுப்பது தான் பிறழ்வுகளுக்கு காரணம்...நமக்கு பதினெட்டு வயதில் கிடைத்த தொழில்நுட்பங்களை விட பல மடங்கு அவனுக்கு பத்து வயதிலயே கிடைத்து விடுகின்றது...சொல்பேச்சு கேட்க மறுக்கிறார்கள் ,மரியாதை தெரியவில்லை என்பது எதார்த்தத்தோட பொருத்தி பார்த்தோமானால் நம் கல்வி அமைப்பு வகுப்புகளுக்கும் சமூகத்திற்குமான இணைப்பு பாலமாக செயல்படாமல் தன்னலம் மட்டுமே பேணுகின்ற குறுகிய குகையாக உள்ளடக்கி வைத்துள்ளது....இந்த எண்ணங்களோடு வளர்த்தெடுக்கப்படுபவர்கள் இவ்வாறாக இல்லாமல் வேறு எந்த பொதுசிந்தனையோடு வெளியேறுவார்கள் ..!!!
      பாடப்புத்தகங்களை சிறப்பாக நடத்துவதால் மாணவர் மனம் கவர்ந்துவிடலாம் என்பதோடு செயல்படுபவர்களால் நிச்சயமாக அவர்கள் நினைத்ததை சாதித்துவிட முடியாது...பாடப்புத்தகத்தை பற்றி அறிய விரும்பினால் நீங்கள் இல்லாமல் ஒரு கணிணி கற்றுதந்துவிடும் ...மதிப்பெண் தான் இலக்கென்றால் மனனம் செய்து கொள்ளும் ஆற்றல் மூலம் அடைந்துவிடலாம் இலக்கை...நம் தேர்வு முறைகளும் அதற்கேற்றார்போல் எதையும் கேள்விக்குட்படுத்தாமல் அவர்களை முட்டையிட வைக்கும் போண்டா கோழிகளாக உருவாகிவிடுகிறது..காட்டில் இருக்கும் சிங்கம் ,புலி ,குரங்கு ,நரி எல்லாருக்குமான போட்டியாக மரம் யார் முதலில் ஏறுகிறீர்களோ அவர்கள் தான் வெற்றியாளர்கள் என்பதாக இந்த போட்டித் தேர்வுகள் இருப்பது வேடிக்கையான வேதனை..வெவ்வேறு குடும்ப சூழ்நிலை ,பொருளாதாரம் ,
பண்பாட்டுதளம் என பல காரணிகளால் வேறுபட்டு வகுப்பிற்குள் வரும் மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டமும் ,ஒரே தேர்வுமுறையும் எந்த விதத்தில் சரி..இப்டி விவாதிக்க வேண்டிய ஆயிரம் விசயங்கள் இருக்கின்றது..ஆசிரியர் -மாணவர் உறவு மேம்பட அவர்களை நல்வழியில் செலுத்த உங்கள் கைகளில் இருக்கும் பாடப்புத்தகத்தின் மூலம் மூளையை தொடுவதால் வெற்றி பெற்றுவிட முடியாது..மாறாக அவர்களை பாடப்புத்தகம் தாண்டி பொது வெளியில் அரங்கேறும் நிகழ்வுகளை தெரிவிப்பதன் மூலம் ,எதையும் கேள்விக்குட்படுத்துதல் மூலமும் நாம் நினைக்கும் வழியில் பயணிக்க வைக்கலாம்..அதற்கு ஆசிரியர்கள் முதலில் தங்களை தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்..பாடப் புத்தகங்கள் தாண்டி பல புத்தகங்களை படிக்க வேண்டும்..
      
      மாணவர் மனம் கவர்வது பெரிய கம்ப சூத்திரம் அல்ல அக்கரையான நான்கு கேள்விகளின் மூலம் அவர்களின் இதயத்தை தொட்டுவிடலாம்...அப்பா என்ன செய்கிறார்??அம்மா எப்படி இருக்கிறார்கள்?? என்று கேட்பதன் மூலம் எளிதாக நுழைந்துவிடலாம்....நீங்கள் அவர் நலனில் கவனம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்ற எண்ணமே அவர் உங்கள் வசம் சரணடைவதற்கு போதுமானது...முதலில் உங்கள் முன் பயப்படுவதாக காட்டிக் கொள்வார் நாட்கள் செல்ல செல்ல பயமின் அடுத்த பரிமாணமான மரியாதை தானாக வந்து இணையும்....ஆசிரியர் மாணவரும் இணையும் புள்ளி பொதுவெளி செயல்பாடுகள் தான்..அதற்கு நம்மை இயங்குதலுக்கு உட்படுத்திக் கொள்ளல் வேண்டும்..
தண்டனைகள் ,கடுமையான நடவடிக்கைகள் மூலமாக தான் மாணாக்கரை நல்வழிப்படுத்த முடியும் என்ற வாதம் பிற்போக்குதனமானது..குற்ற செயல்களுக்கு நமக்கிருக்கும் சட்ட பாதுகாப்புகளின் படி தவறிழைத்தவர்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் தான் நம் ஜனநாயக நாட்டிலும் கூட கொடுத்து வருகிறார்கள்..மேலை நாடுகளில் மிகவும் மோசமான ,உடனே உயிரைப் பறித்து விடுகிற அளவிற்குமான தண்டனைகள் நடைமுறைப் படுத்துகிறார்கள்..இருந்தும் நாளுக்கு நாள் குற்றம் புரிவோர்,உடனிருந்தோர் என விகிதாச்சாரம் கூடிக் கொண்டுதான் செல்கிறது...மாணவர்கள் கொடுக்கும் தண்டனைகள் தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர தவறை சரிசெய்பவர்களாக மாற்றிவிடாது..
மாறாக வாய்ப்பு கிட்டும் பொழுது
தவறிழைப்பவர்களாகவும்,
தப்பிப்பதற்கு எதையும் மேற்கொள்ளும் கீழான நிலையை உருவாக்கி விடும்..கண்காணிப்பு ,அக்கரை ,அன்பின் பொருட்டே நல்ல மாணவரை உருவாக்குவதன் மூலமே தனிநபர் சுதந்திரம் போற்றுகின்ற குடிமைச் சமூகத்தை உருவாக்க முடியும்..
#இரகுநாத்பழனிச்சாமி

No comments:

Post a Comment