Saturday, 14 March 2020

மகிழ்ச்சி

மகிழ்ச்சியை சந்தைப்படுத்திவிட முடியாது... இது ஒன்றும் நுகர்வு பொருள் அல்ல வாங்குவதற்கும் விநியோகம் செய்வதற்கும் மாறாக பரவச் செய்ய தான் முடியும்..மகிழ்ச்சியை ஆவணங்களிலும் ஆடம்பரங்களிலும்
கண்டடைவதென்பது ஒரு விதமான சுயஇன்பம் மட்டுமே!! மகிழ்ச்சியான மனநிலை என்பது முழுக்க முழுக்க உங்கள் மனங்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பலங்களும் ,பலவீனங்களும் அதையொட்டி சக மனிதர்களிடம் காட்டும் அன்பும் தான்.....அன்புக்கு ஆதாரமாய் இருப்பது நம்பிக்கை அதை வளர்த்தெடுக்காமல் அன்பெனும் சுவரை கட்டிக் கொள்ள முடியாது....உண்மையில் அன்பாய் இருத்தல் என்பது தன்முனைப்பு அற்று இருப்பது என்பது தான்...குப்பையில் இருப்பவரையும் ,கோபுரத்தில் இருப்பவரையும் ஒரே கண்ணோட்டத்தில்
மனிதன் என்ற புள்ளியில் பார்ப்பது தான்.....

தருணங்கள் தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றன..அவற்றை நேராக அணுகுகின்ற நொடிகள் மட்டுமே உங்களை அன்பு செய்பவர்களை அடையாளம் காணும் பொழுதுகள்..மகிழ்ச்சியாக இருப்பதென்பது உண்மையில் பெறுவது அல்ல கொடுப்பது பகிர்ந்து கொள்வதன் வழியாக தான் அதன் ஆச்சர்ய மாச்சர்யங்களை உணர முடியும்....என்னிடம் இப்பொழுது இருப்பதற்கும் இனி எப்பொழுதும் இருக்கப் போவதற்கும் ஒன்றுமில்லை என்ற உண்மை தான் என்னை முப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றது...

   வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது மகிழ்ச்சிகளை மழுங்கடிக்கப்பட்ட ஒன்றாகதான் கற்பிதம் செய்யப்படுகின்றது...தீவிரமான அணுகுமுறை தான் வெற்றியாக கருதப்படுகின்றது..
கார்களோடும் ,சொந்த கட்டடங்களோடும் இருப்பது தான் முன்னேற்றமாகவும்,
மகிழ்ச்சியாகவும் தீர்மானிக்கப்படுகின்றது....
இங்கு கண்ணுக்கு புலப்படாத வரிசை ஒன்று இயங்கி கொண்டிருக்கிறது...அதன் முன்னாலும் ,பின்னாலும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை எவ்வளவு முயன்றாலும் அறிந்து கொள்ள முடியாது..நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ள முடியாது..ஆனாலும் அந்த வரிசை நகர்ந்து கொண்டு தானிருக்கும்...இருக்கின்ற நொடிகளில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் ....மகிழ்வித்து மகிழுங்கள்..மனிதரை நேசியுங்கள்...

#இரகுநாத்பழனிச்சாமி