Friday, 18 November 2022

புத்தகம் பார்வை - அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல

அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல

    72 பக்கங்களில் 12 கட்டுரைகள் என அவரின் கடந்த காலத்தை எளிய சொற்களைக் கொண்டு எல்லாவற்றுக்கும் ஒரு மறைமுகப் பக்கம்
என்றில்லாமலும் , எந்த பூடகமுமின்றி நேரடியாக உரையாடி இருக்கிறார் ...

பள்ளிக்கூடங்கள் கற்றுத்தந்த முதல் தந்திரம் -
அறிவை பணமாக்கும் தந்திரம் ஆரம்பித்த முதல் பக்கம் கடைசிவரை அலுக்காமல் அழைத்து சென்றது...

   The fool and the donkey கதையை கேலியாக ரசித்து படித்திருக்கிறேன், சிரித்தும் இருக்கிறேன் .அந்தக் கதை ,

   கழுதை ஒன்றை வாங்க ஆசைப்படுகிற 
ஏழையொருவன் பணமெல்லாம் சேர்த்து சந்தைக்கு போகிறான் ,அங்கிருக்கிற கழுதைகளில் காதுநீண்ட அந்த கழுதையை பார்த்தவுடன் விருப்பபட்டு வியபாரியிடம் இந்த கழுதை எனக்கு பிடித்திருக்கிறது எவ்வளவு என்கிறான் ...
வியபாரி அவரின் மனதை புரிந்து கொண்டவுடன் விலை அதிகமாக  சொல்லி விற்றுவிடுகிறான்..இதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு திருடர்கள் போகிற வழியில் கழுதை கயிற்றை அவிழ்த்து கழுதை இருந்த இடத்தில் தன்னைக் கட்டி கொள்கிறான் ...திருடப்பட்ட கழுதை வியபாரியிடமே திரும்ப விற்கப்படுகிறது ..

   வீடு திரும்பியவுடன் அவனுக்கு அதிர்ச்சி பின்னால் வந்த கழுதை எப்படி மனிதனாக மாறியது என்று !!! அதற்கு அந்த திருடன் அய்யா நான் வீட்டில் அதிகம் சேட்டை செய்ததால் அம்மா என்னை சபித்து கழுதையாக்கி விட்டாள் ..உங்கள் கைப்பட்டவுடன் நான் மனிதனாகி விட்டேன் என்கிறான் ..
இதை நம்பிய அந்த ஏழை இனி இப்படி சேட்டை செய்யாதே என்று அவிழ்த்து விடுகிறான் ...

பிறகு சிறிதொரு நாள் கழித்து பணம் புரட்டி திரும்ப அந்த வியபாரியிடம் போனபோது அதே கழுதையை கண்டு அட பையா மறுபடியும் சேட்டை செய்து கழுதையாகி விட்டாயா ?? என்கிறான்..

   இப்ப நாம்  அந்த ஏழையை முட்டாள் என்று அடையாளப்படுத்துகிறோம் ..
உண்மையாக தன் விருப்பத்தை வெளிப்படுத்தியவன் ,தொடர்ந்து சக மனிதர்களின் குரல்களை கேட்பவன் ,
நம்புகிறவன் முட்டாளா அவ்வாறு தான் அடையாளப்படுத்த வேண்டுமா !!இப்படி தான் வகுப்பறையிலும் ,
சமூக வெளியிலும் நல்லவன் ,கெட்டவன் ,
அறிவாளி ,முட்டாள் நம் பார்வையை வலிந்து திணிக்கும் வன்முறையை பொதுதன்மையாக்கி செய்து முடிக்கிறோம் என்பது அபத்தம்

தரம் என்பது தான் வகுப்பறைக்குள் நுழைந்த முதல் வன்முறை -டால்ஸ்டாய்

   வரலாற்றை மீட்டுருவாக்கம் என்ற பெயரில் திரிபுவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள் ,
வெறுப்புணர்வை வளர்க்கும் வார்த்தைகளை விதைக்கிறார்கள். வரலாற்றை அறிந்து கொள்வதென்பது கடந்த கால தவறுகளை மீண்டும் நிகழாமல் செய்வதற்கு தான் என்பதை மறந்து பாடப்புத்தகங்களில் விஷம துவசேங்களை மெல்ல மெல்ல தொடங்கியிருக்கிறார்கள் ...
இவற்றையெல்லாம் வீர சிவாஜி குறித்த கட்டுரையில் தக்க ஆதாரங்களுடன் காண்பித்திருக்கிறார்...

கோரிக்கைகள் வெல்வதல்ல வீரம் அது  தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதுதான் என்பதை
"செயல்படுவதுதான் சுதந்திரம்" என்று ஒரீரு வார்த்தைகளில் சொல்லி சின்ன புறக்கணிப்பையும்,மறுப்பையும் ஏற்காத என்னை உத்வேகமாக செயல்பட வைத்திருக்கிறார்..

வயோதீகம்  படர படர ,விலகல் அல்ல ஒட்டுதலே விரும்பத்தக்க தீர்வு . ஒடுங்குதல் அல்ல விரிதலே மகிழ்ச்சி.
சடங்குகள் என்பவை
பழமையானவை அவை விவாதங்களை ,உரையாடல்களை அனுமதிக்காதவை ..வகுப்புகள் உயிர்பெற வகுப்பிற்கு வெளியே கற்கும் சூழலை விருப்பத்தை உருவாக்கும் தலைகீழ் வகுப்பறைகள் அவசியம் என்பதை தெரியப்படுத்துகிறார்...

  ஒவ்வொருவரின் மண்டைக்குள் ஒரு உலகமிருக்கிறது அது சுமையாக இருக்கிறது வகுப்பறையும் வீடும் உருவாக்கியதாக எழுத்தாளர் சொல்கிறார் ,கூடுதலாக வீடு ,வகுப்பறை தாண்டி  கூடுதலாக சமூகத்தையும் ,சமூக ஊடகங்களையும் சேர்த்துக் கொள்வோம்.
கற்றது கையளவு ,கல்லாதது உலகளவு என்பதை ஒவ்வொருவரும் அடிக்கடி சொல்லிக் கொள்வதும் புரிந்து கொள்வதும் அவசியமாகும் ...
நிரப்பபட்ட கோப்பையின் மீது ஊற்றப்படுகிற ஒவ்வொன்றும் வழிந்தோடி வீணாவதை போல மேதாவி என்ற நினைப்பைக் கொண்டு உங்களை எப்போதும் நிரப்பிக் கொள்ளாதீர்கள் ,ஆசிரியருக்கு அந்த எண்ணம் அறவே இருக்கக்கூடாது .

  பூனையின் வழியான அன்பு,
நக்கீரன் கோபால் ,
அறிவொளி இயக்க செயல்பாடு ,
தேசியக் கல்வி கொள்கை பற்றிய கண்ணோட்டம் ,
சுஜாதாவின் The hidden side of everything ,
என கட்டுரைகள் எல்லாமும் வாசிக்க வேண்டிய அவசியமானவை

ஆசிரியர்களுக்காக திருமிகு ச.மாடசாமி அய்யா கூறுவது 
நீங்கள் கோபங்கொண்ட மாணவர்களோடு தயவுசெய்து கை குலுக்குங்கள் .கண்டித்த மாணவர்களை அழைத்துப் பேசுங்கள் .வகுப்பறையில் நட்பை மலர வைப்பதற்காகத் தோற்றுப் போங்கள் .தோற்பதற்கு கூச்சபடாதவர்களே உண்மையான வீரர்கள் ; உண்மையான ஆசிரியர்கள்...

நன்றி ஆசிரியர் திருமிகு.ச.மாடசாமி 
அவர்களுக்கு 

#APR

Thursday, 3 November 2022

கால வண்டி

   காலம் கடந்து போகும் என்கிறார்கள்!! இல்லை , இல்லை!! சிலவற்றை காணாமல் போகவும் செய்துவிடும் என்பது நிதர்சனம் ...

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்லப் பாட்டு 
மாலை முழுதும் விளையாட்டு- என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா
என்று பாடிவிட்டு பாரதி கடந்துவிட்டார் ..
இன்றைக்கோ காலையும் மாலையுமாக கணிணி மயமாக ,கைபேசியும் கையுமாக பாப்பாக்கள் வீட்டின் படுக்கையறைக்குள்ளே புரண்டு கொண்டிருப்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
    எனக்கு நன்றாக நினைவில் ஓடுகிறது 
நான் ஓட்டிய பனைமர வண்டி !! புத்தகப்பையை வந்து வீட்டில் கழற்றி வைத்தவுடன் தெருவிற்குள் நுழைவதும் 
அந்த பனை வண்டிய தயார்பண்ணி வைத்து ஒத்த கையில் தள்ளி நகர்த்துவதும் ஏதோ மரணக்கிணறு வண்டி சாகசம் போல உணர்வு கிளந்தெழும் ..அந்த வண்டியை தயார் பண்ணுவதென்பது நட்டு ,போல்ட்டை கழட்டும் எளிமையான வேலையல்ல எங்க ஊரில் அந்த வண்டிய தயார் பண்ணவே ஊருக்குனு அண்ணே ஒருத்தர் இருப்பாங்க அவர்ட்ட இரண்டு நாள் கெஞ்சனும் ,ஒரே அளவுள்ள பனைபழம் கிடைக்கும் வரை காத்திருக்கனும்..அதற்கு பிறகு அதைக் காயப்போட்டு நடுப் பொந்தில் ஒரே அளவான ஓட்டையை போட்டு உருண்டை குச்சியை கோர்த்து வைக்கனும் அதற்கும் பிறகு சின்ன கைக்கு இசைவான கவட்டைக் குச்சியை தேடிப்பிடித்து அதை அந்த பனைப்பழம் சொருகியிருக்கிற குச்சியில் நாயகமாக பிடித்து தள்ளும் போது உலகமே பின்னாடி உருண்டு வரது மாதிரியான சந்தோசம் நான் அனுபவிச்சிருக்கேன் ..
இப்ப பனை னா என்ன என்பதையே பிள்ளைகளுக்கு டிஜிட்டல் வடிவத்தில் காட்ட வேண்டியதாக இருக்கிறது..

நான் வளர்ந்த தெருவில் எல்லாம் மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை நாங்கள் எல்லாருமாக அமளிதுமளிப் பண்ணிக் கொண்டும் ஐஸ்பாய் ஆடிக் கொண்டிருப்போம் ..
புலங்கிய இடங்களில் மறைவதும் அந்த இருட்டில் கப்பைஸ் அடிப்பதும் ஆகப் பெரிய சாதனை ஐஸ் 1 ஆக்கூடாது என்பதில் எல்லோருக்கும் சுயநலம் ஓடிக் கொண்டே இருக்கும் அதே ஐஸ் 1 நம் நண்பர்கள் ஆகிட்டா அவனக் காப்பாத்த கப்பைஸ் அடிக்கனும் ன்றே உத்வேகம் ஏதோ எதிரிநாட்டுக்குள் படையெடுத்துப் போற பதைப் பதைப்போடு பதுங்கி பதுங்கிப் போவோம் ..இப்ப குழந்தைகள் வீட்டுக்குள்ள மட்டுமே பதுங்கி இருக்கிற 
காலம் ,ஆறு மணினா எல்லாத் தெருக்களும் மயான அமைதியாக குடிக் கொண்டிருக்கிறது..

    பஞ்சர் ஒட்டுற சைக்கிள் கடைக்காரன் அண்ணன பழக்கம் பிடிச்சு அவுங்க வேணாம் னு ஒதுக்குற டயர வாங்கிட்டு வந்து அதற்கென்றே பிரத்யேகமான குச்சி ஒன்றை தயார் செய்து யார் அந்த டயரை கீழ விடாம ரொம்ப தூரம் ஓட்டுறாங்க ன்ற போட்டிய எல்லாம் இந்த குழந்தைள் இன்னும் இந்த டிஜிட்டல் உலகத்தில் தேடுனாலும் கிடைக்காது ..அந்த குச்சி தான் ஸ்டியரிங் அதை லாவகமாக சாய்க்கிறப்ப அந்த டயர் நாம சொன்னபடியெல்லாம் சுத்தும் அதுவும் ஒரீரண்டு முயற்சியில் எல்லாம் வாய்த்துவிடாது ,குச்சியையும் டயரையும் பழக்கப்படுத்த வேண்டும்..


      பம்பர விளையாட்டு அதுல ஆம்பளக் கட்டை ,பொம்பளைக் கட்டைனு ரக ரகமா பேரு இருக்கும் ..நல்ல பம்பரமா கடையில் தேடிப்பிடிச்சு வாங்கி அந்த ஆணிய கூர்படுத்த தெரிஞ்ச வித்தையெல்லாம் செஞ்சு வச்ருப்போம் ..
பம்பரத்தை கையில சுத்த விடுறது பெரிய மந்திர வித்தை அதை எடுக்க வேண்டுமென்றால் அந்த கையிற்ற முதல்ல எடுத்து ஆணி அச்சுல இருந்து சுத்தி அதோடு முடிவு பகுதியில நம் வசதிக்கு ஏற்றார் போல மூடியோ ,வாசரோ வச்சு பிடித்துக் கொண்டு ஒரு சுழற்று சுழற்றி விட்டோமானால் சர்ர்ர்னு சத்தம் வரும் அப்படியே அந்தரத்தில் கையநீட்டி அதை உள்ளங்கையில் சுத்த விடுரப்ப ஏற்படும் குறுகுறுப்ப எந்த சர்க்கஸ் விளையாட்டும் தராது


    ஜான்கல்லு விளையாட்டுல என் நண்பன் கல்லை என் மண்டையில் போட்ட வடு , மணிக் காவியத்தில் முதுகில் ஏறி உட்கார்ந்தப்ப அழுத ராஜா , 
சோடா மூடிக்கு அருண்கிட்ட போட்டுகிட்ட
சண்டை , 
கிரிக்கெட் பேட்டும் ,டீவியும் இருந்ததாலயே என்னை தலைவனா ஏத்துக்கிட்ட கூட்டம் னு என் பால்ய நினைவுகளை துளிமை விஜயராகவன் எழுத சொல்லி சுரக்க வைத்துவிட்டார் ,அவருக்கு நன்றிகள்

#APR