Sunday, 28 July 2019

நம்பிக்கை

  
   பற்றிக் கொள்ள எதுவொன்றும் இல்லாத பொழுது விடியலில் கதிரவனின் கதிர் கரங்களை பிடித்துக் கொண்டு உயரம் தொட எண்ணுங்கள்..வெய்யலில் தூறலாய்,கடுங்குளிரில் புழுக்கமாய் ஏதாவதொன்றாகி யாரேனும் உடுத்திக் கொள்ளும் உபயோகமான ஒன்றாக மாறிவிட வேண்டும்..உதைபடுவோம் என்பதை அறிந்திருந்தாலும் காற்றால் நிரப்பிக் கொண்டு பறந்து போகவே ஆசைப்படுங்கள்....எட்டிப் பிடிக்கும் தூரம் இல்லையென்றாலும் அன்பெனும் பெருவெளியில் தாங்கி ,தூக்கி கொள்ள கைகள் இருப்பதனால் கலங்காமல் மீனின் துள்ளலை போல ஒரு நொடியேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள குதிக்க தொடங்குங்கள்...
ஜனனத்துக்கும்,
மரணத்துக்குமான காலஇடைவெளி வாழ்க்கை என்றானபின் அதை அர்த்தப்படுத்திக் கொள்ள மொட்டுக்களால் பூக்கும் கனவுகளை மலரச் செய்ய முடிவெடுத்துவெடுத்து செயல்படுங்கள்..எள்ளில் எண்ணெய் இருக்கும் ,பசுவின் மடியில் பாலிருக்கும் என்று சொல்வதில் என்ன விந்தை இருக்க போகிறது செயலில் தானே காட்ட முடியும்!!!

தூக்கி எரியப்படும் ஒவ்வொன்றுக்கும்  பரந்த வெளி இருக்கிறது.. காகிதமாய் உன்னை நினைத்து வீசி எரிந்தால் பறக்கும் பட்டமாய் அவர்கள் அண்ணாந்து பார்க்கும் வரை பறக்க ஆரம்பி..!!!!
வாழ்க்கை என்பது கொண்டாட்டத்திற்கானது..
இன்பமும் ,துன்பமும் காய் கனியாவது போல நாம் கிளைகளை பரப்பிக் கொண்டே இலக்கை நோக்கி உயர்ந்து பயணித்து கொண்டே இருக்க வேண்டும்...கிளைகளில் யார் வேண்டுமானாலும் இளைப்பாரட்டும் ,
இருப்பிடமாக்கி கொள்ளட்டும்..பூ ,கனிகளின் எடை தாங்காமல் எந்த மரமும் சரிந்தது இல்லை..நாம்
வசந்தத்தை பரப்பிக் கொண்டே இருப்போம்!!!
சிறுத்தை வேகமாக ஓடும்,மான் அதிக தூரம் ஓடும் இவ்விரண்டும் ஒன்றோடொன்று பிணைந்தவை..அவற்றின் வாழ்விற்கான காரணியாகவும் ,அதுவே தப்பித்தல் காரணியாகவும் இருப்பது இறைமையின் படைப்பின் விந்தை சாராம்சம்..பலமும் ,பலவீனமும் கலந்தவன் தான் மனிதன்..வெற்றி ,தோல்வி  என்பது பெறுவதும் கொடுப்பதும் தான் இவை என்றும் இடப்பெயர்ச்சிகள் தான்..நம் பணி களத்தில் இருப்பது தான்..நிராகரிப்பை தவிர மிகச்சிறந்த ஊக்கமருந்து எதுவுமில்லை..நீங்கள் நிராகரிக்கப்பட்ட இடமெல்லாம் வெறும்  வெற்றிடம் தான் உங்கள் தடத்தை பதிவிடும் இடத்தை வெற்றி பெற்ற இடமாக மாற்றுங்கள்..நம்முடைய தோல்வி தரும் ஆகச் சிறந்த பரிசு வெற்றி என்பதை நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுங்கள்!!!..

நம்மில் சலனம் ஏற்படுத்த சிலர் குளம் என்றெண்ணிக் கல் எறிவார்கள்..அவர்களுக்கு உணர்த்தி விடுங்கள் உங்கள் வினையால் நீங்கள் எதையும் விழுங்கிக் கொள்ளும் ஆழ்கடல் என்று!! சுழிகளில் தப்பி பிழைத்தவனுக்கு அரபிக் கடலும் ஒன்று தான் அரைக் குவளை நீரும் ஒன்று தான்!!

பார்வையாளர்கள் வரிசையில் இருக்கிற நாற்காலி நாம் என்றாவது ஒருநாள் மேடையேறத்தான் செய்வோம்..வண்ண விளக்குகளும் ,பூச்செண்டுகளும் நம் முன்னே பளிச்சிடும் காலம் வரும்..சந்தர்பத்தின் மறுபெயர் கடவுள் என்பார்கள்..நமக்கான நேரம் வரும் அதுவரை
நொடி முள்ளாக ஓடிக் கொண்டே இருப்பது மட்டுமே நம் செயல்..

வாழ்க்கை  மிகவும் இலகுவானது நம்பி நகருங்கள்!!!
     அறிமுகமில்லாத அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களில் ஏதாவதொரு வார்த்தை நம்மை அந்த புத்தகம் நோக்கி நகர்த்தும் ..அடுத்த நொடி என்னவென்று அறியாத ஆச்சர்ய மாச்சர்யங்கள் நிறைந்த உலகில் நம் முன்னதாக நொடிகளும் ,மணித் துளிகளுமாக கொட்டிக் கிடக்கின்றன....ஏதாவதொரு நொடி நமக்கு உவப்பானதாக உய்விக்க கூடியதாக இருக்கும் அந்த நொடி யாராலும் தட்டிப் பறிக்க முடியாதது.. முழுவதும் உங்களுக்கானது!!!

    அலைக்கழிக்கப்பட்ட தூசுவிற்கும் படிவதற்கான இடம் காத்திருக்கும்..இன்னல்களை மட்டுமே எண்ணிக்கொண்டு கனங்களை நகர்த்துவதில் நம்மை இன்பம் கொள்ள செய்யும் எதுவொன்றும் தானாக சுரந்துவிடாது..காற்றிற்கு இசையும் கிளைகளின் இலைகளைப் போல நம்மை வருடிக் கொள்ள வலம் வரும் காற்று வந்தே தான் தீரும் ..மழையில் நனைந்த கோழிக் குஞ்சாய்  கிளர்ந்து கொள்ள செய்யும் வினாடிக்கான நேரம் எப்பொழுது என்பதில் தான் சுவாரஸ்ய சுவையிருக்கின்றது..!!!

      கேள்விகள் என்னை அதிகம் எதிர்கொண்டிருக்கின்றன !!!வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லை, முக்கியத்துவம் அறியவில்லை, எதையும் அழுத்ததுடன் அணுக மறுக்கின்றாய் ,போட்டிகள் சூழ் உலகத்தில் பொறுப்பற்று இருக்கிறாய் என்பதாக நிறய கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றேன்..எனக்கான பதிலாக நான் முன்வைப்பது எதையும் தீவிர முனைப்போடு சீரிய முகபாவனைகளோடு அணுகுவதில் உடன்பாடில்லாதவன்..மாறாக நிதானத்துடன் அந்த நொடியை உள்வாங்கி கொள்கிற ஆர்வத்தோடு மாற ,மாற்ற இயலாத ஒன்றை பற்றி கவலை கொள்ளாமல் கடக்க பழகியவன்..என்னால் இன்னும் மாற மாற்றிக் கொள்ள முடியாத ஒன்றாக கருதுவது எவரொருவரின் வலியையும் எதன் நியாய ,அநியாய காரணங்களுக்கும்
ஏற்றுக்கொள்ள இடமின்றி உணர்வுகளின் பால் சங்கிலியிடப்பட்டிருக்கின்றேன்...அதிலிருந்து தான் என்னால் அறுபட்டுக் கொள்ள முடியவில்லை..சில சமயம் நினைப்பதுண்டு ஒருவழியாக இந்த சங்கிலி தான் ஒரே நிலப்பரப்பில் இருக்கும் நெல்லுக்கும்,புல்லுக்கும் நீரை சுரக்கின்ற மழை மாதிரி சக மனிதன் எல்லாரையும் மாசற்று நேசிக்க செய்வதாக நம்புகின்றேன்..
வாழ்க்கையை நான் பந்தயமாக அணுகுவதில்லை..
நொடிகளையும்,
மணித்துளிகளையும் அவதானிக்கும் பார்வையாளனாக பாவித்துக் கொண்டிருக்கின்றேன்....
என்னுடன்  கைகோர்ப்பவர்கள் ,
கட்டி அணைப்பவர்கள்,
புறந்தள்ளுவோர் என
ஒவ்வொருவரிடமும் கற்றுக் கொள்ள வாழ்க்கை பல விடயங்களை வழங்கியிருக்கிறது..

     வாழ்க்கை இலகுவானது நாம் அணுகும் விதத்தில் அவை உருமாற்றமடைந்து நம்மை வந்தடையும்..ஒரு நிமிடம் உங்கள் மூச்சை உற்று கவனியுங்கள் ...அவை சொல்லும் அன்பு சூழ் உலகம் என்று!!!உங்களை லேசாக்கி கொள்ளுங்கள்....இந்த நிமிடம் நீங்கள் கனமற்று மேக பொதிக்குள் மிதக்கும் நீர்த்துளியாக உணர்வீர்கள் என்று நம்புகின்றேன்..

#இரகுநாத்பழனிச்சாமி

நம்பிக்கை ஒன்றுதான் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் அகல்விளக்கு!!வழிகளை வெளிச்சமாக்கலாம் ,வென்றும் காட்டலாம் ..நம்பிக்கை அதானே எல்லாம்!!!

Friday, 26 July 2019

காலம் மாறுகிறது

காலமாற்றம் பருவநிலைகளில் மட்டுமல்ல மனித சமூகத்தின் மீதும் தான்..ஆனால் அவை கொடுக்கும் இரசவாதம் அடுத்தடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்று கொண்டே இருக்கின்றது.1990 அதற்கு முந்தைய காலகட்டத்தில் மக்களிடம் இல்லாத பதற்றத்தையும்,படபடப்பையும் தற்போதைய எண்ணியல் வளர்ச்சி அதிகப்படுத்தி இருக்கின்றது..இனிமையோ,
துயரமோ தரும் செய்தி எதுவாயினும் இருதரப்புக்கும் இடைப்பட்ட பயணம் மெதுவானது..அவை அதிக அளவிலான மனக் கிலேசங்களை ஏற்படுத்தவில்லை..மாறாக இப்பொழுது கையிலிருக்கும் அலைபேசி நொடிக்கு நொடியான தகவல்களை கடத்தி மனமெனும் மாயசக்தியை உச்சத்தை அடைய வைத்துவிடுகிறது..செய்திகள் தரும் படபடப்பை தவிர நமக்கு விருப்பமானவர்க்கு நாம் ஒருமுறைக்கு இருமுறை அழைத்தும்  பதில் கிடைக்காத பொழுது  வரும் உளச்சிக்கல்கள் ,
ஓடும் எண்ண ஓட்டங்கள் அபரிவிதமானவை....தலை நிமிர்ந்து நடந்தவர்களை குனிந்த  தலையோடு நடை பழக வைத்திருக்கிறது தொல்லைபேசி..
கடிதப் போக்குவரத்து தான் எவ்வளவு இரசனையானது..
இராணுவத்திலிருப்பவர்கள் வீட்டிலிருப்பவர்களுக்கு எழுதும் கடிதம் ,வெளியூர் ,வெளி மாநிலத்திலிருந்து வரும் கடிதம் என்று ஒவ்வொன்றும் கதை பேசும்..கடிதத்தில் நலம் ,நலம் அறிய அவா என்று ஆரம்பிக்கும் வார்த்தைகள் வாஞ்சையையும் ,அதே சமயம் வலிகளையும் அள்ளி தருபவை..எங்களுக்கு வரும் கடிதங்கள் எல்லாம் இராணுவத்தில் இருக்கும் மாமாவால் எழுதபட்டவை ..
நலம் விசாரிப்புகள் இருந்து அன்றாட நடவடிக்கை முதற்கொண்டு அத்தணையும் அந்த ஒரு பக்கத்தில் வரிக்கப்பட்டிருக்கும்..
எனக்கென்று சில வரிகள் அதில் என்றைக்கும் இடம் பெற்றிருக்கும்....
கடிதங்கள் தான் காதலை வளர்த்திருக்கின்றன!!
கவிதைகளை படைத்திருக்கின்றன!!!
கதைகள் சொல்லியிருக்கின்றன!!
கடிதங்களை தான் நட்டுவைக்கப்பட்ட கரையான் கோபுரங்கள் அலை
அழித்துவிட்டன...

அறிவியல் ஆக்கம் அதிகபட்ச படபடப்பையும் பரிசளித்திருக்கிறது..
டிமானிஸ்ட்ரேசன் அரசாங்கம் மட்டும் உருவாக்கவில்லை
மக்கள் மனதிலும் உருவாகியிருக்கிறது..பள்ளிக் கூடத்திற்கு பைசாக்களை பாக்கெட் மணியாக கொண்டு போன காலத்தில் ஒரு ரூபாய்க்கு இருந்த மதிப்பு  கலர் கலராய் காந்தி தாத்தா சிரிக்கும் நூறு ரூபாய் கரன்சிக்கு இப்போது இல்லை..பணம் என்பது நுகர்வுக்கான பொருளாக அல்லாமல் அதிகாரம் , ஆசை ஆகியவற்றின் கருவியாக மாறி பாதாளத்தையும் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது !!!!

இருபது வருட முன் வரைக்கும் ஒரு தெருவில் இருந்தோமென்றால் அந்த வீட்டு குட்டி வாண்டுகள்ல இருந்து ,பெரியவர்கள் வரைக்கும் அவர்களுடைய பேரு ,வரலாறு னு எல்லாம் எல்லாத்துக்கும் தெரியும்!!வீட்டு சுவத்த தொட்டா ஒலி எழுப்புற சத்தம்,யார் லாம் வீட்ட பாக்குறாங்கனு பார்க்கிறதுக்கு ஒரு காணொளி கருவி!!இதெல்லாம் இருக்கப்ப பக்கத்து வீட்டு பாட்டி ,பெரியப்பா ,
மாமாக்கெல்லாம் தேவையும் வேலையும் ஏற்படாமல் போய்விட்டது!!!அப்பொழுதெல்லாம்
தெருவிற்கே நான்கு தொலைக்காட்சி இருக்கும் ஏதோ ஒரு வீட்டில் வண்ண தொலைக்காட்சி இருக்கும் ..அதை  பார்க்க அந்த தெருவில் இருக்க பத்து குழந்தைகளும் அங்கே தஞ்சம் அடைவார்கள்!!சில நேரம் இம்சையாக அவர்கள் அதை உணர்ந்தாலும், பல சமயம் கொண்டாடிய பெரியவர்கள் தான் அதிகம்!!குழந்தைகளும் அவர்கள் வீட்டு தேவைக்கு கடைக்கு போவது, முதல் சின்ன சின்ன வேலையெல்லாம் செய்வார்கள்!!தெருவிற்க்கு ஒரு குழாய் இருக்கும் பத்து வீட்டு பெண்களும் காலையில குழாயடியில் அடிதடி சண்டை போட ஆரம்பித்து மாலையில் ஊர் விசயம் பேசுவதில் கரைந்து போய் விடும்!!!சக்கரை கடன் வாங்கரது,டீத்துள் கொடுக்கறது என்று இப்படி கொடுக்கல் வாங்கல் வேறு அந்த உறவை இன்னும் நெருக்கமாக்கும்..அப்படியே சின்ன சின்ன சண்டை வந்தாலும் அவர்கள் வீட்டில் சுடுகிற வடையில காணாமல் போய் விடும்...தீபாவளி ,பொங்கல் கலகலப்பாக்கும்..
எப்பொழுதாவது வெளியூர் பயணம்  அந்த சமயம் பக்கத்து வீட்டில் சாவிய கொடுத்துட்டு போவோம் அதைவிட பெரிய பாதுகாப்பு தேவையற்றதாக இருந்தது!!!இப்படி பக்கத்து வீடுகளில் மாமா ,அத்தை ,பெரியப்பானு உறவுகள் கிடைத்தது....

ஆனால் இப்ப தேவை இருக்கோ ,இல்லயோ கிரைன்டர் ல இருந்து வாசிங்க் மெசின் வரைக்கும் வாங்கி அடைத்துவிடுகிறோம்!!
வீடு வீடுக்கு ஆழ்துளை கிணறு போட்ரோம்!!கொடுக்கல் வாங்கல் தேவையில்லாமல் ஆகிவிட்டது!!!அதனால் அந்த குழந்தைகளுக்கு இந்த மாதிரியான உறவுகளுக்கும் வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது!!!இந்த தொழில் நுட்பம் ,நாகரீக வளர்ச்சி எல்லாம் ஏதோ அவர்களுக்கு பெறுவதை விட இழப்பதை அதிகம் செய்திருக்கின்றது..

முகம் பார்த்து நட்புகளை வளர்த்த காலம் போயி முகநூலில் மூழ்கி தேடிக் கொண்டிருக்கும் காலமாகியது...கவிதை சொல்லி காதல் வளர்த்த காலம் போயி கட்செவி அஞ்சலில் ஹாய் சொல்லி பை பை உடன் முடிந்துவிடுகிறது...பக்கத்தில் இருக்க பள்ளிக் கூடம் போக வீடு மாறி போன நிலை மாறி பக்கத்து பக்கத்திலயே பள்ளிகூடங்கள் மரங்களை விட அதிக எண்ணிக்கையில் உதித்திருக்கின்றன .கால்கடுக்க கல்லூரிகள் தேடி ஓடி அலைந்த கால்களை இப்போது வீடு வரை சென்று வாசல்களை திறந்துவிட்டு வரவேற்கின்றன..இரவு எட்டு மணி செய்திகளுக்காக காத்திருந்த நேரம் போயி இருபத்திநான்கு மணி நேர செய்தி சேனல்களில் சிக்கிக் கொண்டோம் ..
காட்சிகளும் மாறுகின்றன..
காலங்களும் மாறுகின்றன!!
எதிர்காலமெல்லாம் நிகழ்காலமாக மாற்றி தெரியக் கூடிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை..வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் இயந்திரத்தோடு இயந்திரமாக பயணிக்கும் காலம் இன்னும் சிலகாலம் தான்..
ஆம் காலம் மாறுகிறது........

Thursday, 25 July 2019

பசி

வறண்ட நிலத்தில் ,உப்புக் கரிக்கும் உடம்பில், தளர்ந்த நடையில் அவனுக்கு கிடைக்கும் ஒரு சொட்டு நீர் அமிர்தத்தை விட மேலான ஒன்று..பசி ருசி அறியாது என்ற பதத்தில் அவனுக்கு உடன்பாடு இல்லை அவன் எல்லாவிதமான பசியின் ருசிகளையும் சுவைத்திருக்கிறான்..சிலருக்கு கை விரல்களின் அதிகார பசி,பலருக்கு இடுப்புக்கு மேல் இருக்கும் பசி,இன்னும் சிலருக்கு இடுப்புக்கு கிழேயான பசி..பசிக்கு விருந்தளிப்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்..அகோர பசியை அடைபவர்கள் அவர்களே விருந்தாகி கொள்கிறார்கள்...
இக்காரணி ஒன்றே இனிமைக்கும் ,இம்மைக்கும் காரணமாகி விடுகிறது..இந்த தீரா பசிகள் தான் மனித இயக்கத்தை சுழலவிட்டுக் கொண்டிருக்கின்றன..இந்த மண் தான் எத்துணை விசித்திரமானது..!!அவ்வளவு பேரையும் தாங்கிக் கொண்டு,எவ்வளவு விழுங்கினாலும் பத்தாதென்று இன்னும் அகல வாயை திறந்து தன்னுள் புதைத்து கொண்டே தானே இருக்கிறது..
பசிகள் எல்லாம் ஒரே இரவில் தீர்ந்துவிட்டால் இங்கு ஓடுவதற்கான களம் இல்லாமல் சொரணையற்று ,சோம்பலாய் காலத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிற வேலை மட்டுமே மிஞ்சும்!!!!
பசித்திரு என்பது ஆகாரம் அன்றி இருத்தல் இல்லை..மாறாக அறிவு வேட்கையை எப்பொழுதும் நிரப்பிக் கொள்ளும் நிலையில் இருத்தல்.....
வலைதளத்தில் பார்க்கும் பொழுது முதன்முதலாய் என்ற வார்த்தை தட்டுபடவும் விரும்பி பார்த்தேன்..முதன்முதலாக என்ற வார்த்தை இடத்தை பொறுத்து சாதனையாகவும் ,
வேதனையாகவும் பார்க்கப்படுகிறது...அதுவே இந்த கட்டுரைக்கும் காரணமாகிவிட்டது!!
பொலிவியா என்ற நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை அங்கீகரித்து அந்நாட்டு அரசே ஆணை பிறப்பித்திருக்கிறது..ஒருவேளை உணவிற்கே ஏதாவதொரு வேலை செய்ய வேண்டியிருக்கிறது...
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அதிகப்படியான குடும்ப வறுமை!!சுய வேலை செய்ய பத்து வயதும்,மற்றவர் கீழ் பணி புரிய 12 வயதும் வரம்பாக வைக்கப்பட்டிருக்கின்றன..
கருத்தடை பற்றி கவலை இல்லாத நாட்டில் ,கருசிதைவை மா குற்றமாக கருதும் இடத்தில் குடும்ப வறுமைக்கு காரணம் எதுவென்று புரியாமல் இருப்பது விந்தையிலும் விந்தை...நம்முடைய நாட்டிலும் ஏதாவதொரு பசியின் பொருட்டு உருவான குழந்தை தொழிலாளர்கள் இருக்கதான் செய்கிறார்கள் ..ஆனால் குறைந்தபட்சம் பதினான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்த கூடாது என்ற ஆணையானது சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது திருப்தி பட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று...
பொலிவியாவில் உலாவிய
சே குவாரா , அடுத்தநொடி உயிரோடு இருப்போமா என்ற கை,கால் விளங்கிடப்பட்ட நிலையில் தான் இருக்கும் இடம் இடிபாடுகளுடைய பள்ளி என்றவுடன் அதற்காக வருத்தப்பட்டாராம்..அவர்கள் நடமாடிய மண்ணில் இந்நிலை நிச்சயம் வருத்தத்திற்குரியது...
பாலைவனத்தின் பச்சை நிறத்தில் இருக்கும் இலைக்கு தெரிய வாய்ப்பில்லை வேர் எவ்வளவு தாகத்தில் இருக்கிறதென்று.....பசியை நீங்கள் அறியவில்லையென்னால் ஒருநாளேனும் உண்ணாமல் உழைத்துப் பாருங்கள்..பசியை அறிவீர்கள்..பசியின் இறுதியில் சிறுகுடலை ,பெருங்குடல் விழங்க முயற்சிக்கும் அவஸ்தையை அறிவீர்கள்..
கொடிலினும் கொடியது பசி..பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நாம் எவ்வளவு தான் பக்தி செலுத்தக் கூடியவனாக இருந்தாலும் இறைவன் மனமிறங்க மாட்டார்..பசியோடு இருப்பவனுக்கு பந்தி வைக்காவிட்டாலும் பசி ஆற்றிக் கொள்ள கிள்ளியாவது கொடுங்கள்..
பசியை புரிந்து கொள்ளுங்கள்... போக்க வழிவிடுங்கள்

Tuesday, 23 July 2019

மௌனம்

   உலகத்தில் எல்லோரும் அறிந்த, ஆனால் புரிந்து கொள்ளப்பட முடியாத மொழி மௌனம்....இதன் அதிர்வுகள் தரும் ஆர்ப்பரிப்பு எண்ணிலடங்காதவை..
மௌனங்களுக்கு பின்னால் யாரும் யூகித்தரிய முடியாத சத்தங்கள் நிறைந்திருக்கின்றன..
அவற்றில் குடிகொண்டிருக்கும் நிசப்தங்கள் தரும் விடைகள் யாராலும் விளங்கி கொள்ள முடியாதவை..அவற்றின் மேல் உறைந்திருக்கும் வார்த்தைகள் ஆயுள் மிக்கவை...!!!!எல்லா வண்ணக் கலவைகளின் இறுதியில் ஒளிந்திருக்கும்  கருமையின் நிறம் போல நம்முள் உறங்கி கொண்டிருக்கும் மௌனத்தை சுவிகரித்து பாருங்கள்... உங்களுக்குள்ளேயே ஊடுவிச் செல்லும்
சுவாசத்தைக் கூட அறிவீர்கள்...வார்த்தைகளுக்கு வழி இல்லாமல் போகும் மௌனநிலையே உங்குள்ளாக உரையாடிக் கொள்ளும் வாய்ப்பு... இசைக் கோவையை மட்டுமே கேட்டிருந்த  செவிகள் என்றாவதொரு நாள் இதய ஓசையை கேட்கட்டும்... கருவறைக்குள்  மௌனம் பிரசவத்தில் நம் அழுகை,
எட்டு கால் யாத்திரையின் மௌனம்
மற்றவர் அழுகை... 
இவற்றை வாழ்நாட்கள்  இடைவெளியிலயே உணரத் தொடங்கினோமானால் ஆனந்த கீற்று உள்ளோடும் ,ஆனந்த கண்ணீர் மட்டும் வரமாகும் தவமே மௌனமாகும்....
நாளொன்றுக்கு சராசரியாக மனிதன் 7000 வார்த்தைகளை உச்சரிக்கின்றானாம்...
வார்த்தைகள் எண்ணங்களின் கருவூலங்கள்..
நல்வார்த்தைகளுக்கு எண்ணங்களை செழுமைப்படுத்த வேண்டும்..வார்த்தைகளற்ற யோக நிலையே  கூர்மைப்படுத்தும் ..
வெளியேறிவிட்ட எந்த வார்த்தைகளும் நமக்கு சொந்தமானவை அல்ல...காற்றில் கரைந்த வார்த்தைகள் தரையில் கொட்டிய பாதரசத்தை குழந்தைகள் வெறுங்கையில் அள்ள முயற்சிப்பது போன்றதொரு செயல்... விளைவுகளை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீண் என்றார் புரட்சியாளர் ஒருவர்..
ஆயிரம் பேச்சுக் குரல்களின் மத்தியில் உங்கள் அமைதியின் அடர்த்தி மற்ற அனைவரையும் கவனிக்க செய்யுமானால் நீங்கள் பேசுவதை கேட்க இரண்டாயிரம் செவிகள் தயாராக இருப்பது திண்ணம்...சப்தங்களின்றி இருப்பது மட்டுமல்ல மௌனம், இரைச்சல்கள் மத்தியிலும் கல் என்பதாகும் ..கல் என்பதன் பொருள் தோண்டுதல் ..
மோன நிலையில் நமது அகங்காரங்களான கர்வம்,பொறாமை, காழ்ப்புணர்வு இவற்றை தோண்டி தூர எறிந்து நல்வினைகளுக்கு பொருத்தமான அன்பு,சகிப்புதன்மை இவற்றை இட்டு நிரப்புதலுக்கு அடிநாதமாக அமைவது மௌன நிலை மட்டுமே...
ஒரு ஜென் குருவிடம் சீடன் ஒருவன் நான் எப்பொழுது விழிப்புணர்வுடையவனாக மாறுவேன் என்று கேட்டதற்கு நாளை முதல் குடிலில் வந்து தங்கு என்றாராம்..காலையில் வழக்கம் போல் குளித்து ,தோட்ட வேலைகள் செய்து,உணவருந்தி விட்டு அமைதியாகவே இருந்தாராம்..அடுத்த நாள்,அதற்கடுத்த நாள் என்று  தொடர்ந்து கொண்டே இருக்கவும்,எதையாவது சொல்வார் என்று காத்திருந்த சிஷ்யன் கடுப்பாகி குருவே நீங்கள் எனக்கு எதுவும்
கற்றுதரவில்லையே!!!என்றான்..இல்லை நீ தான் கவனிக்க தவறிவிட்டாய் நான் குளிக்கும் பொழுது குளித்தேன், உண்ணும் போது உண்டேன்,தோட்ட வேலையின் போது வேலை செய்தேன்..என்றார் சிஷ்யனுக்கு புரிந்து விட்டது மௌனமாய் இருப்பது செயலற்று இருப்பதன்று..!!மாறாக விழிப்புணர்வுடன் இருப்பது!!!
ஒருநாளேனும் மௌனமாய் இருந்து உள்ளிருக்கும் ஆற்றலை உணர்ந்து பாருங்கள்..
மரங்களின் மௌனம் தென்றல்
மலைகளின் மௌனம் நீர்வீழ்ச்சி
நெருப்பின் மௌனம் தீபம்
ஆழ்கடல் மௌனம் அலை
மௌனங்களுக்கு பின்னால் எல்லாம் அழகும் ,ஆச்சர்யமும் அடங்கியிருக்கின்றன....