Thursday, 19 December 2019

புதிய கல்வி கொள்கை

  பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர வேண்டுமானால் அப்பொழுதெல்லாம் தலையை சுற்றி காதை தொட்டால் தான் ஆறு வயது ,ஏழு வயது என்று நம்பி குழந்தைகளை சேர்ப்பார்கள்..இப்ப காது எங்க இருக்கு என்பதை அறிந்த உடனே பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள்..பொலிவியாவில் பத்து வயது குழந்தை, தொழிலாளராக அனுமதிக்கப்படலாம் என்பதற்கும் இந்த புதிய வரைவு திட்டத்தில் மூன்று வயதில் குழந்தைகளை கட்டாய பள்ளி கல்வியில் சேர்க்கலாம் என்பதற்கும் பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை..இரண்டுமே பால்ய சுரண்டல் தான்..புதிய கல்விக் கொள்கையை விமர்சனம் செய்வதற்கு பெரிய கல்வியாளராக ,முனைவர் பட்டம் பெற்றவராகவோ இருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை,கல்வியறிவு பெற்றவராக இருந்தாலே போதும்..
கல்வியறிவில் மேன்மை அடைந்ததாக கருதப்படும் பின்லாந்து நாட்டில் கூட ஆறு வயதிற்கு பிறகு தான் பள்ளிக் கல்வி ஆரம்பமாகிறது...
அ என்றால் அம்மா மருவி அனுமன் என்று பாடத்திட்டத்தில் வரும்..அய்யனார் சாமி எல்லாம் கூட வராது..காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே பாடத்திட்டம்...
   இந்த புதிய வரைவு கல்வித் திட்டம் ஏற்க்கபட வேண்டியதா ,இல்லை எரிக்கப்பட வேண்டியதா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்....
தொடக்க கல்வி தாய் மொழிக் கல்வியாக இருக்கும் பட்சத்தில் தான் குழந்தைகள் செறிவொடு கற்பார்கள் ..மூன்று வயதிலயே பன்மொழி திறன் பயிற்சி தருவது அவர்கள் சிறகுகளை வெட்டி எரியும் வேலை தானே தவிர விவேகம் அல்ல..இவ்வரைவு திட்டத்தின்படி விருப்ப மொழியாக பெரும்பான்மையானவர் தேர்ந்தெடுக்கும் மொழி இந்தி அல்லாது வேறு என்னவாக இருக்க போகிறது..இந்திய ஒன்றியம் என்பதை ஒழித்து கட்டி ஒரே மொழி ,ஒரே மதம் ,ஒரே கலாச்சாரம் என மாற்றும் செயல் தானே தவிர உற்றுப் பார்த்தால் வேறெதுவும் தெரியாது
மூன்று வயதிலயே பன்மொழி திறனும் , தனித்திறன் பொருட்டு மண்பாண்டம் செய்தல்,மின் பொருள் கையாளுதல் இப்படி ஏதாவதொன்றை கற்றாக வேண்டியதாக கூறியுள்ளது..மூளை முழுமையடையும் முன்பே முடமாக்கும் செயல்தானே தவிர முன்னேற்றத்திற்கான
செயலல்ல..
கற்றல்திறன் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபட்டு இருக்கும் பொழுது ஒரே தேர்வும் ,முடிவும் எப்படி மதிப்பிடபடும்... பள்ளிக்கல்வியையே வெறுக்கச் செய்து மரபு சார்ந்த அறிவை பெற்றிருக்கும் சிலரை மட்டும் தக்க வைத்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வழி தானே தவிர வேறொன்றும் இல்லை..
இதுவரை (1-5)தொடக்கக் கல்வி ,(6-8)நடுநிலை ,(9-10)உயர்நிலை ,
(11-12)மேல்நிலை பிரிக்கபட்ட நம் பள்ளி கல்வியானது ப்ரீகேஜி
(pre kg -2ம் வகுப்பு)தொடங்கி இரண்டாம் வகுப்பில் ஒரு பொதுத் தேர்வும்,ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வும் ,இறுதியாக எட்டாம் வகுப்பில் பொது தேர்வும் என பிரிக்கப்படுகிறது..அதாவது அவர்கள் கூற்றுப்படி 5+3+3+4..எப்பொழுதோ வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பயம் காட்டியே நம்மை எல்லாம் தேர்வு சமயங்களில் எவ்வளவு மன இறுக்கத்திற்கு உள்ளாக்கி தாங்களே தேர்வு எழுத போகுபவர்களாக பெற்றோர் படபடத்த நிலை நாம் அறிவோம்...இவ்வளவு ஏன் பதினொன்றாம் வகுப்பில் பொதுத் தேர்வு கண்டவுடன் பள்ளியில் மேல்நிலைக் கல்வியில் இடைநிற்றல் நின்றவர் ஒரு லட்சம் ..பத்தாம் வகுப்பு தேர்விற்கே 16 வயதில் தன்னை தயார்படுத்திக் கொள்ள சிறப்பு வகுப்பு ,கூடுதல் நேரம் ஒதுக்குதல் என்ற நிலையில் 2 ம் வகுப்பு ,ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பை எட்டும் பதினான்கு வயதிற்குள் மூன்று பொதுத் தேர்வுகள் சாத்தியமா?? குழந்தைகள் என்ன மன நிலையில் இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்...
   உங்களால் படிக்க இயலவில்லையா  உனக்கொரு தொழில் பழகிக் கொள் இல்லையென்றால் உன் அப்பாவின் தொழிலை செய்து கொள் என்று வரையறுக்கப்பட்ட நவீன குலக் கல்வி திட்டம் தான் இது...
   உயர்கல்வியில் செய்த மாற்றம் தான் இன்னும் கவனத்திற்குரியது..பதின் மூன்று வயதிலேயே !!!தான் என்னவாக ஆக வேண்டும் என்பதை முடிவு செய்து அடுத்த நான்கு வருடத்தில் எட்டு பருவத் தேர்வுகள் எழுதி பெற்ற மதிப்பெண்கள் இருக்க அது எதுவும் போதாதென்று கல்லூரி நுழைவிற்கென நுழைவுத் தேர்வு நடத்தி அதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியை அவர்கள் தேர்ந்தெடுத்து கொடுப்பார்கள்.. என் கேள்வி என்னவென்றால் அப்போது எதற்காக ,யாருக்காக அந்த எட்டு பருவத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்...
 
   நுழைவுத் தேர்வு மதிப்பெண் பெற்று கல்லூரி சேர்ந்தாலும்,பருவத் தேர்வுகள் எழுதினாலும் இறுதியில் Exit தேர்வு வேறு ஒன்று உண்டு..அதில் வெற்றி பெற்றால் தான் பட்டம் பெற முடியும்....இந்த பட்டம் கொடுப்பதையும் தனியார் கல்லூரிகளே முடிவு செய்து கொள்ளலாம்.. இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் வளர்ச்சிக்கு உதவாமல் வேறு எதற்கு???
இங்கு நான் கேள்வியாக கேட்டிருப்பதும் ,பதிலாக என் சிந்தைக்கு எட்டியதை சொல்லியிருப்பதும் வெறும் 10 % மட்டுமே..நாம் இதில் விவாதிக்க ஆயிரம் விசயங்கள் இருக்கின்றன...சில கேள்விகளை மட்டும் விட்டு செல்கிறேன்..
1.1976 அவசர நிலையில் பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி ஏன் மறுபடியும் மாநில பட்டியலுக்கு திரும்ப வில்லை..???பொது என்ற வார்த்தை உபயோகபடுமானால் இந்த வரைவு கொள்கை பற்றி ஏன் மாநிலங்களிடம் கருத்து கேட்கவில்லை??
2.மாநிலத்தில் உள் மாவட்டங்களுக்கிடையே வழக்காடும் சொல் வேறு வேறாக இருக்கும் பொழுது இந்தியா முழுமைக்குமான தேர்வு தேவையா??
3.பள்ளி வளாகம் என்று அமைக்கபடுமாயின் அருகாமை பள்ளி நிலையும் அங்கு பயிலும் மாணவர் நிலையும் என்னவாகும்??ஒற்றை நபருக்காக தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி அமைக்கும் பொழுது பள்ளிகளை வேறொன்றாக மாற்றும் செயல் சரியா??
4.நம் அடிப்படை வேதமான வேற்றுமையில் ஒற்றுமை இனி உச்சரிக்க படுமா??
5.பட்டம் வழங்குதல், கேள்விதாள் அமைத்தல் என்று தனியாரிடம் விட்டால் கல்வி சார்ந்த அறம் பாதிக்கபடாதா??
6.தொடர்பு மொழி ஆங்கிலமாக இருக்க ,எந்த திணிப்புமின்றி தமிழ்நாட்டில் மெட்ரிக் ,சிபிஎஸ்இ,வருடம் 30 லட்சம் பேர் இந்தி பயின்று கொண்டிருக்க மும்மொழி கொள்கை அவசியமா??
7.தேசிய ஆணையம் அமைக்கப்பட்டு பிரதமரின் கீழ் அனைத்து உறுப்புகளும் செயல்படுமாயின் அந்தந்த மாநில அரசின் கல்வி சார்ந்த நடவடிக்கையில் அதிகாரம் என்ன???
இன்னும் விவாதிக்க நிறய இருக்கிறது..எளிமையாக சொல்லியிருக்கிறேன்
#இரகுநாத்பழனிச்சாமி

No comments:

Post a Comment