#நடுச்சாமநடுக்கம்
சின்ன வயசில் காய்ச்சல் வந்தால் எல்லாருக்கும் வருகிற மாதிரி நமக்கும் வருகிறது!!அம்மாவோ ,அப்பாவோ மருத்துவரிடம் அழைத்து சென்று ஊசி ஒன்று போட்டுவிடுவார்கள் அந்த சிற்றெறும்பு கடியும், கசப்பான மாத்திரைகளும் அம்மாவின் அன்பான அரவணைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விரைவிலேயே சரி ஆகிவிடுகின்றது.ஆனால் வயது ஏற ஏற பெற்றோருடன் இடைவெளி ஏறிவிடுகிறது ,
காய்ச்சல் வந்தால் நமக்கு மட்டும் ஏன் என்ற எண்ணம் வந்துவிடுகிறது.....ஆனால் இந்த நோய்களும்,வலிகளும் தான் வீடு கற்றுக் கொடுக்காததை பெற்றுக் கொடுத்துவிடுகிறது!!!!
எனக்கும் வெகு நாட்களுக்கு பிறகு குளிர்காய்ச்சல் வந்தது!! இரண்டு போர்வைகளை பொத்தியும் ஐஸ்கட்டியின் சிலுசிலுப்பு குறையவே இல்லை!!இரன்டு மணி என் அனத்தம் கேட்கவே என் அம்மாயி விழித்து கண்கொத்தி பாம்பாய் கவனித்துக் கொண்டார்!! ரங்க ராட்டினத்தில் தலைகீழாக இருந்தால் எப்படி குடலை புரட்டி புரட்டி எடுக்குமோ அந்த மாதிரி ஓங்கரமாய் வாந்தி , மூளைக்குள் ஆயிரம் ஓட்டங்கள், ஒற்றை தலை பத்து தலையாக மாறி கனத்தது..அம்மாவின் அரவணைப்பில் அன்றய இரவு தப்பித்து காலையில் மருத்துவமனை சென்று மீண்டுவிட்டேன்!!! மனிதம் உணர்த்தாதை வலிகளும் நோய்களும் உணர்த்தி விடுகின்றன!!!அருகாமையில் நேசிக்க ஆயிரம் கரங்கள் நீட்டுகின்ற வாய்ப்புஇருக்க என்னை போன்றவர்களுக்கே சிலசமயம் வலிகளும் ,நோய்களும் வந்து தான் நாம் இன்னும் அன்பு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றது
நான் அரசு பொதுமருத்துவமனையில் கண்ட காட்சியும் , என் குற்ற உணர்ச்சியையும் பதியவே இந்த பகுதிகள்!!! ஒற்றை நாடி என்று சொல்வார்களே அந்த அளவில் ஒரு எழுபது வயது நிரம்பிய பெரியவர் !! குழி விழுந்த கன்னமும் ,எலும்பில் ஒட்டாமல் தொங்கும் சதையும், சல்லடையான கைலியும் அவர் கேட்பாரற்ற ஆள் என்பதை காட்டிவிட்டது..ஊசி போடச் சென்ற எனக்கு கடப்பாரையை குத்தியதாய் இருந்தது அங்கு நடந்தவை, அந்த பெரியவருக்கு குளுக்கோஸ் போடுவதற்காக கையில் நரம்பை தேடிக் கொண்டிருந்தார் செவிலியர்!! ஒற்றை நாடியான உடம்பில் எங்கே இருந்து நரம்பை பிடிப்பது மாற்றி மாற்றி ஊசி ஏற்றினார் அவர் அந்த அய்யாவின் வலி அனத்தம் வேறு என்னை ஏதோ செய்தது!! அந்த செவிலியரால் முடியாமல் போகவே மற்றொரு செவிலியர் முயற்சித்தார் ,எனக்கு அவ்விடத்திலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்றெண்ணியவாறே அந்த பெரியவரின் பெருவலியை பார்த்துக் கொண்டே இருந்தேன்...ஒரு நிலையில் அமைதியிழந்து கொஞ்சம் பார்த்து போடுங்க என்றேன் அந்த செவிலியரிடம், அவர் மறுவார்த்தை என்னிடம் பேசவே இல்லை..அந்த அய்யா இப்போது முனகவில்லை!! அங்கிருந்த உதவியாளரிடம் யாரும் கூட வல்ல மேல கொண்டு போ என்றவாறு சொல்லவே நீ போ ,நான் போ என்று அவர்கள் பேசினார்களே தவிர அந்த படுக்கை அப்படியே இருந்தது!!! ஊசியின் வலியை விட உறவுகள் இல்லாத வலி அவர் பார்வையில் பனித்தது, ஏன் நான் ஒரு ஒரு மணிநேரம் அவரிடம் செலவிட்டு இருக்க கூடாதென்று என் குற்ற உணர்வு அரித்து கொண்டிருக்கிறது
No comments:
Post a Comment