காலம் கடந்து போகும் என்கிறார்கள்!! இல்லை , இல்லை!! சிலவற்றை காணாமல் போகவும் செய்துவிடும் என்பது நிதர்சனம் ...
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்லப் பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு- என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா
என்று பாடிவிட்டு பாரதி கடந்துவிட்டார் ..
இன்றைக்கோ காலையும் மாலையுமாக கணிணி மயமாக ,கைபேசியும் கையுமாக பாப்பாக்கள் வீட்டின் படுக்கையறைக்குள்ளே புரண்டு கொண்டிருப்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை ..
எனக்கு நன்றாக நினைவில் ஓடுகிறது
நான் ஓட்டிய பனைமர வண்டி !! புத்தகப்பையை வந்து வீட்டில் கழற்றி வைத்தவுடன் தெருவிற்குள் நுழைவதும்
அந்த பனை வண்டிய தயார்பண்ணி வைத்து ஒத்த கையில் தள்ளி நகர்த்துவதும் ஏதோ மரணக்கிணறு வண்டி சாகசம் போல உணர்வு கிளந்தெழும் ..அந்த வண்டியை தயார் பண்ணுவதென்பது நட்டு ,போல்ட்டை கழட்டும் எளிமையான வேலையல்ல எங்க ஊரில் அந்த வண்டிய தயார் பண்ணவே ஊருக்குனு அண்ணே ஒருத்தர் இருப்பாங்க அவர்ட்ட இரண்டு நாள் கெஞ்சனும் ,ஒரே அளவுள்ள பனைபழம் கிடைக்கும் வரை காத்திருக்கனும்..அதற்கு பிறகு அதைக் காயப்போட்டு நடுப் பொந்தில் ஒரே அளவான ஓட்டையை போட்டு உருண்டை குச்சியை கோர்த்து வைக்கனும் அதற்கும் பிறகு சின்ன கைக்கு இசைவான கவட்டைக் குச்சியை தேடிப்பிடித்து அதை அந்த பனைப்பழம் சொருகியிருக்கிற குச்சியில் நாயகமாக பிடித்து தள்ளும் போது உலகமே பின்னாடி உருண்டு வரது மாதிரியான சந்தோசம் நான் அனுபவிச்சிருக்கேன் ..
இப்ப பனை னா என்ன என்பதையே பிள்ளைகளுக்கு டிஜிட்டல் வடிவத்தில் காட்ட வேண்டியதாக இருக்கிறது..
நான் வளர்ந்த தெருவில் எல்லாம் மாலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை நாங்கள் எல்லாருமாக அமளிதுமளிப் பண்ணிக் கொண்டும் ஐஸ்பாய் ஆடிக் கொண்டிருப்போம் ..
புலங்கிய இடங்களில் மறைவதும் அந்த இருட்டில் கப்பைஸ் அடிப்பதும் ஆகப் பெரிய சாதனை ஐஸ் 1 ஆக்கூடாது என்பதில் எல்லோருக்கும் சுயநலம் ஓடிக் கொண்டே இருக்கும் அதே ஐஸ் 1 நம் நண்பர்கள் ஆகிட்டா அவனக் காப்பாத்த கப்பைஸ் அடிக்கனும் ன்றே உத்வேகம் ஏதோ எதிரிநாட்டுக்குள் படையெடுத்துப் போற பதைப் பதைப்போடு பதுங்கி பதுங்கிப் போவோம் ..இப்ப குழந்தைகள் வீட்டுக்குள்ள மட்டுமே பதுங்கி இருக்கிற
காலம் ,ஆறு மணினா எல்லாத் தெருக்களும் மயான அமைதியாக குடிக் கொண்டிருக்கிறது..
பஞ்சர் ஒட்டுற சைக்கிள் கடைக்காரன் அண்ணன பழக்கம் பிடிச்சு அவுங்க வேணாம் னு ஒதுக்குற டயர வாங்கிட்டு வந்து அதற்கென்றே பிரத்யேகமான குச்சி ஒன்றை தயார் செய்து யார் அந்த டயரை கீழ விடாம ரொம்ப தூரம் ஓட்டுறாங்க ன்ற போட்டிய எல்லாம் இந்த குழந்தைள் இன்னும் இந்த டிஜிட்டல் உலகத்தில் தேடுனாலும் கிடைக்காது ..அந்த குச்சி தான் ஸ்டியரிங் அதை லாவகமாக சாய்க்கிறப்ப அந்த டயர் நாம சொன்னபடியெல்லாம் சுத்தும் அதுவும் ஒரீரண்டு முயற்சியில் எல்லாம் வாய்த்துவிடாது ,குச்சியையும் டயரையும் பழக்கப்படுத்த வேண்டும்..
பம்பர விளையாட்டு அதுல ஆம்பளக் கட்டை ,பொம்பளைக் கட்டைனு ரக ரகமா பேரு இருக்கும் ..நல்ல பம்பரமா கடையில் தேடிப்பிடிச்சு வாங்கி அந்த ஆணிய கூர்படுத்த தெரிஞ்ச வித்தையெல்லாம் செஞ்சு வச்ருப்போம் ..
பம்பரத்தை கையில சுத்த விடுறது பெரிய மந்திர வித்தை அதை எடுக்க வேண்டுமென்றால் அந்த கையிற்ற முதல்ல எடுத்து ஆணி அச்சுல இருந்து சுத்தி அதோடு முடிவு பகுதியில நம் வசதிக்கு ஏற்றார் போல மூடியோ ,வாசரோ வச்சு பிடித்துக் கொண்டு ஒரு சுழற்று சுழற்றி விட்டோமானால் சர்ர்ர்னு சத்தம் வரும் அப்படியே அந்தரத்தில் கையநீட்டி அதை உள்ளங்கையில் சுத்த விடுரப்ப ஏற்படும் குறுகுறுப்ப எந்த சர்க்கஸ் விளையாட்டும் தராது
ஜான்கல்லு விளையாட்டுல என் நண்பன் கல்லை என் மண்டையில் போட்ட வடு , மணிக் காவியத்தில் முதுகில் ஏறி உட்கார்ந்தப்ப அழுத ராஜா ,
சோடா மூடிக்கு அருண்கிட்ட போட்டுகிட்ட
சண்டை ,
கிரிக்கெட் பேட்டும் ,டீவியும் இருந்ததாலயே என்னை தலைவனா ஏத்துக்கிட்ட கூட்டம் னு என் பால்ய நினைவுகளை துளிமை விஜயராகவன் எழுத சொல்லி சுரக்க வைத்துவிட்டார் ,அவருக்கு நன்றிகள்
#APR
No comments:
Post a Comment