Tuesday, 21 April 2020

காவல்துறை

கண்ணியமிகுந்த காவல் துறை அதிகாரிகளே,
உங்களை வெறுப்பதற்கு முதலில்
என்னை மனித்துக் கொள்ளுங்கள்...உங்கள் மீது எனக்கு துளியளவும் அச்சமில்லை
அதேசமயம் புலங்காத வீட்டின் ஒற்றடையாக வெறுப்பு மண்டிக்கிடக்கிறது... அதிகாரமும் ,பணமும் அற்ற மிகச் சாதாரணமான என்னால் அதை தவிர வேறு ஒன்றை செய்யவும் இயலாது...
     விபத்தில் அடிபட்டு அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற நிலையில் தன்னிலை மறந்து திரிந்து கொண்டிருந்த என்னிடமும் ,அம்மாவிடமும் கூட்டத்திலிருந்து விலக்கி நைச்சர்யமாக காதருகே கிசுகிசுத்து மயங்கி விழுந்து  இறந்ததாக எழுதி எங்களிடமே கையெழுத்து பெற்று சென்ற அக்கிரமம் அரங்கேறியது.....உடற்கூறு சோதனையில் மூளையில் காயம்பட்டதாகவும் தலைக் காயம் தான் மரணத்திற்கு காரணமாக முடிவு வந்த பின்பும் எங்களால் அதை வைத்து ஒன்றும் செய்ய  முடியவில்லை..என் அப்பாவின் மரணம் எதன் பொருட்டு என்று எங்கள் ஒருவராலும் அறிந்து கொள்ள முடியவில்லை....
எங்களிடம் எழுதி
வாங்கியது தான் முதல் தகவல் அறிக்கை என்றும் அதில் பிரசுரிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் வாக்குமூலங்களும் என்று பிறகுதான் அறிந்துகொண்டேன்..
எந்தந்த வகைகளில் தங்கள் பணிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிற்கிறதோ
அந்தந்த வார்த்தைகளில் எல்லாம்
அதாவது சக்கரை நோயும் ,சிறுநீரக கல் சிகிச்சை எடுத்ததெல்லாம் கோர்த்து எழுதி கொண்டு ஒருவாயாக குற்றத்தை கண்டுபிடிக்கும் வேலையிலிருந்தி காவல்துறையினர் விலகிக் கொண்டார்கள்...காவலர் சமூகம் முழுக்க முழுக்க சுயநலம் கொண்டவர்களால் நிரம்பி கிடக்கிறது...
    அதிகார படிநிலையில் உள்ள காவல்துறையில் ஒவ்வொருவருமே தங்கள் கீழ்நிலையில் உள்ளவர்களை அடிமை மனப்பான்மையில் வழிநடத்துகிறார்கள்...ஆய்வாளர்க்கு ,உதவி ஆய்வாளர்,அவருக்கு ஏட்டு ,ஏட்டுக்கு புதிதாய் பணி அமர்ந்தவர் இவர்கள் எல்லாருக்குமாய் சேர்த்து அதிகாரமற்ற  தினக் கூலிகளும் ,பயத்தை கக்கத்தில் சுமந்து திரியும்
நடுத்தர வர்க்கமும் இவர்களின் இலக்கு..இவர்களை மட்டுமே உங்களால் ஒருமையில் அழைத்து விட முடியும்......
சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலயே இருக்கின்ற பொருளாதார நிலையில் மேம்பட்டு இருக்கிறவர்களிடம் விரல் அசைவை கூட காவலர்களால் காட்டிவிட முடியாது..
    நானும் தவறின் பொருட்டு காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு கணவன் மனைவி பிரச்சனையாக மத்தியஸ்தரம் நடந்து கொண்டிருந்தது...நான் அங்கு பணிபுரியும் எழுத்தரிடம்
என் முகவரியை பதிவு செய்வதற்காக காத்திருந்தேன்.....எனக்கு முன்னதாக ஒருவர் கையை கட்டிக்கொண்டு வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டுக் கொண்டு
தன் இருப்பிடம் பற்றி  சொல்லிக் கொண்டிருந்தார்....அடுத்ததாக நான் வெகு  இயல்பாக என்னை பற்றிய தகவல்களை கூறிக் கொண்டிருந்தேன்..அவை அவருக்கு ஒரு விதமான அவமதிப்பாக தோன்றியிருக்க வேண்டும்..வார்த்தைக்கு வார்த்தை என்னிடம் சார் மற்றும் கைகட்டலும் எதிர்பார்த்திருப்பார் என்று எண்ணுகிறேன்....இதனால் இரண்டு முறை வெளியே செல்ல முற்படும் பொழுது அவன கூப்டு ,அவன கூப்டு என்று ஒருமையில் கூப்பிட்டு சுய இன்பம் பெற்றுக் கொண்டார்...
குழந்தைகளோடு நின்றிருந்த தம்பதியர்களை  காவல் துறை ஆய்வாளர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்....அவர்களை நீ ,வா என்று ஏகமாக பேசிக் கொண்டிருந்தார்..இன்னும் சொல்லப் போனால் அக்கிரமான வார்த்தைகளை வசைமழையாக பொழிந்துக் கொண்டிருந்தார்...உண்மையில் அந்த வார்த்தைகளை இந்த இடத்தில் பதிவிட முடியவில்லை...யாராக இருந்தாலும் வீட்டில் குழந்தைகளுக்கு அப்பா தான் கதாநாயகன்...குழந்தைகள் முன்னிலையில் இனி அந்த முகம் எவ்வாறு எதிர்கொள்ளும்...பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்தார்...என்னால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை முனகிக் கொண்டே நகரத்தான்  முடிந்தது...ஏன் பெரியவர்கள் எக்காரணம் கொண்டும் காவல்நிலையத்தில்
கால் வைக்கக்கூடாது என்று சொல்லியிருப்பார்கள் என்று புரிந்தது..ஆனாலும் எனக்கு தெரிந்து சில நல்லவர்களும் அத்தி பூத்தாற்போல் காணக் கிடைக்கிறார்கள்..தன் அடையாள அட்டையை எதன் பொருட்டும் பயன்படுத்த நினைக்காத நண்பன், அப்பா என்று அழைத்த ஒரு காரணத்திற்காக அன்பின் பொருட்டு அக்கரையாய் பேசும் காவல் ஆய்வாளரையும் அறிந்திருக்கிறேன்...இதன் பொருள் அவர்கள் பணி பொறுப்பற்றவர்கள் அல்ல மக்களை மதிக்கத் தெரிந்த மாண்புமிகுக்கள்...

சட்டம் மக்களை காக்க
காவலர்கள் மக்களை  நல்வழிப்படுத்த ,அதிகாரம் கொண்டு அடிமைப் படுத்தவோ அடி கொடுக்கவோ அல்ல....

#இரகுநாத்பழனிச்சாமி

No comments:

Post a Comment