நிர்வாணம் பொதுவாக நாகரீகத்தின் அச்சோடு ஒட்டப்பட்டு மனித தோற்றத்தின்
படோடாபமாக சில நேரங்களில் ஆடைகளின் பின்னல் வழியே மதிப்புக்குரியவர்களாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது....
கிழிந்த உடைகளை அணிந்து கொள்வதிலும் ,ஒருவேளை மறந்து போயி பூட்ட மறந்திருக்கும்
அவிழ்ப்பானையும் சுட்டிக் காட்டுபவர்களிடம் பெரும்பாலும் எனக்கு கூச்ச உணர்வு தோன்றியதில்லை மாறாக சிரிப்பை உதிர்த்துவிட்டு கடந்து தான் பழகியிருக்கிறேன்....
நான் விபரம் அறிந்து இருபத்தைந்து வருடங்கள் வாடகை வீட்டில் ஆறுக்கு ஆறு அறையில் நானும் என் குடும்பமுமாக நால்வரும் அதற்குள்ளாகவே புலங்கியிருக்கிறோம்..காலையில் பள்ளி செல்லும் நெருக்கடி ,பணிக்கு ஆயத்தமாகும் அவசரம் தந்த சூழலால் உடுப்பு மாற்ற உடுத்த அந்த ஒரே அறையின் சந்திப்புகள் தவிர்க்க முடியாதவை...கழிப்பறைகள் இல்லாத தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட தீக்குச்சியாய் நெருக்கி ஒட்டப்பட்ட வீடுகள்...குறிப்பிட்ட வயது வரும் வரை காலை கடன்கள் சுற்றி ஓடிய சாக்கடையில் தான் பெரும்பாலான நிர்வாணங்கள் அந்த குடியிருப்பில் வாழ்ந்த பெண்களின் காட்சி படிமங்கள் தான்...
எதை பெரிதாக போற்றுகிறமோ அதை துட்சமாக நினைக்கும் மனப்பான்மை இயல்பாகவே உருவானதால் கூச்ச உணர்வு என்பது எனக்கு மழுங்கடிக்கப்பட்டிருந்தது....
குறிப்பிட்ட வயதிற்கு பின்பாக கரடு தேடி ஓடிய பொழுதும் எனக்கு முன்பாக அங்கு நூறு நிர்வாணங்கள் சூழ்ந்திருக்கும்..அதனால் அரைமேனியோ ,திறந்த மேனியோ என் கண்களை சுழிக்கச் செய்ததில்லை....
வீடற்றவனின் மனநிலை வெறுமையான உள்ளீடற்ற வதைகள்..ஒவ்வொருவரும் ஏதோ ஒருவித அகசிக்கல்களின் முடிச்சுகளில் சுழன்று கொண்டு இருப்பார்கள்...எங்கு சென்று திரும்பி வந்தாலும் அடைவதற்கு கூடு என்று ஒன்று இருந்தாக வேண்டும்.. அதை என் அப்பா எங்களுக்கு இறுதியாக அளித்து சென்றிருக்கிறார்...அவருக்கு நாள்தோறும் எங்களின் வேண்டுதலுடன் கூடிய நன்றிகள்...
வீடற்றவனின் குரல் குமுறல்கள் நிறைந்தது.....
#இரகுநாத்பழனிச்சாமி
No comments:
Post a Comment