காலமாற்றம் பருவநிலைகளில் மட்டுமல்ல மனித சமூகத்தின் மீதும் தான்..ஆனால் அவை கொடுக்கும் இரசவாதம் அடுத்தடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்று கொண்டே இருக்கின்றது.1990 அதற்கு முந்தைய காலகட்டத்தில் மக்களிடம் இல்லாத பதற்றத்தையும்,படபடப்பையும் தற்போதைய எண்ணியல் வளர்ச்சி அதிகப்படுத்தி இருக்கின்றது..இனிமையோ,
துயரமோ தரும் செய்தி எதுவாயினும் இருதரப்புக்கும் இடைப்பட்ட பயணம் மெதுவானது..அவை அதிக அளவிலான மனக் கிலேசங்களை ஏற்படுத்தவில்லை..மாறாக இப்பொழுது கையிலிருக்கும் அலைபேசி நொடிக்கு நொடியான தகவல்களை கடத்தி மனமெனும் மாயசக்தியை உச்சத்தை அடைய வைத்துவிடுகிறது..செய்திகள் தரும் படபடப்பை தவிர நமக்கு விருப்பமானவர்க்கு நாம் ஒருமுறைக்கு இருமுறை அழைத்தும் பதில் கிடைக்காத பொழுது வரும் உளச்சிக்கல்கள் ,
ஓடும் எண்ண ஓட்டங்கள் அபரிவிதமானவை....தலை நிமிர்ந்து நடந்தவர்களை குனிந்த தலையோடு நடை பழக வைத்திருக்கிறது தொல்லைபேசி..
கடிதப் போக்குவரத்து தான் எவ்வளவு இரசனையானது..
இராணுவத்திலிருப்பவர்கள் வீட்டிலிருப்பவர்களுக்கு எழுதும் கடிதம் ,வெளியூர் ,வெளி மாநிலத்திலிருந்து வரும் கடிதம் என்று ஒவ்வொன்றும் கதை பேசும்..கடிதத்தில் நலம் ,நலம் அறிய அவா என்று ஆரம்பிக்கும் வார்த்தைகள் வாஞ்சையையும் ,அதே சமயம் வலிகளையும் அள்ளி தருபவை..எங்களுக்கு வரும் கடிதங்கள் எல்லாம் இராணுவத்தில் இருக்கும் மாமாவால் எழுதபட்டவை ..
நலம் விசாரிப்புகள் இருந்து அன்றாட நடவடிக்கை முதற்கொண்டு அத்தணையும் அந்த ஒரு பக்கத்தில் வரிக்கப்பட்டிருக்கும்..
எனக்கென்று சில வரிகள் அதில் என்றைக்கும் இடம் பெற்றிருக்கும்....
கடிதங்கள் தான் காதலை வளர்த்திருக்கின்றன!!
கவிதைகளை படைத்திருக்கின்றன!!!
கதைகள் சொல்லியிருக்கின்றன!!
கடிதங்களை தான் நட்டுவைக்கப்பட்ட கரையான் கோபுரங்கள் அலை
அழித்துவிட்டன...
அறிவியல் ஆக்கம் அதிகபட்ச படபடப்பையும் பரிசளித்திருக்கிறது..
டிமானிஸ்ட்ரேசன் அரசாங்கம் மட்டும் உருவாக்கவில்லை
மக்கள் மனதிலும் உருவாகியிருக்கிறது..பள்ளிக் கூடத்திற்கு பைசாக்களை பாக்கெட் மணியாக கொண்டு போன காலத்தில் ஒரு ரூபாய்க்கு இருந்த மதிப்பு கலர் கலராய் காந்தி தாத்தா சிரிக்கும் நூறு ரூபாய் கரன்சிக்கு இப்போது இல்லை..பணம் என்பது நுகர்வுக்கான பொருளாக அல்லாமல் அதிகாரம் , ஆசை ஆகியவற்றின் கருவியாக மாறி பாதாளத்தையும் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது !!!!
இருபது வருட முன் வரைக்கும் ஒரு தெருவில் இருந்தோமென்றால் அந்த வீட்டு குட்டி வாண்டுகள்ல இருந்து ,பெரியவர்கள் வரைக்கும் அவர்களுடைய பேரு ,வரலாறு னு எல்லாம் எல்லாத்துக்கும் தெரியும்!!வீட்டு சுவத்த தொட்டா ஒலி எழுப்புற சத்தம்,யார் லாம் வீட்ட பாக்குறாங்கனு பார்க்கிறதுக்கு ஒரு காணொளி கருவி!!இதெல்லாம் இருக்கப்ப பக்கத்து வீட்டு பாட்டி ,பெரியப்பா ,
மாமாக்கெல்லாம் தேவையும் வேலையும் ஏற்படாமல் போய்விட்டது!!!அப்பொழுதெல்லாம்
தெருவிற்கே நான்கு தொலைக்காட்சி இருக்கும் ஏதோ ஒரு வீட்டில் வண்ண தொலைக்காட்சி இருக்கும் ..அதை பார்க்க அந்த தெருவில் இருக்க பத்து குழந்தைகளும் அங்கே தஞ்சம் அடைவார்கள்!!சில நேரம் இம்சையாக அவர்கள் அதை உணர்ந்தாலும், பல சமயம் கொண்டாடிய பெரியவர்கள் தான் அதிகம்!!குழந்தைகளும் அவர்கள் வீட்டு தேவைக்கு கடைக்கு போவது, முதல் சின்ன சின்ன வேலையெல்லாம் செய்வார்கள்!!தெருவிற்க்கு ஒரு குழாய் இருக்கும் பத்து வீட்டு பெண்களும் காலையில குழாயடியில் அடிதடி சண்டை போட ஆரம்பித்து மாலையில் ஊர் விசயம் பேசுவதில் கரைந்து போய் விடும்!!!சக்கரை கடன் வாங்கரது,டீத்துள் கொடுக்கறது என்று இப்படி கொடுக்கல் வாங்கல் வேறு அந்த உறவை இன்னும் நெருக்கமாக்கும்..அப்படியே சின்ன சின்ன சண்டை வந்தாலும் அவர்கள் வீட்டில் சுடுகிற வடையில காணாமல் போய் விடும்...தீபாவளி ,பொங்கல் கலகலப்பாக்கும்..
எப்பொழுதாவது வெளியூர் பயணம் அந்த சமயம் பக்கத்து வீட்டில் சாவிய கொடுத்துட்டு போவோம் அதைவிட பெரிய பாதுகாப்பு தேவையற்றதாக இருந்தது!!!இப்படி பக்கத்து வீடுகளில் மாமா ,அத்தை ,பெரியப்பானு உறவுகள் கிடைத்தது....
ஆனால் இப்ப தேவை இருக்கோ ,இல்லயோ கிரைன்டர் ல இருந்து வாசிங்க் மெசின் வரைக்கும் வாங்கி அடைத்துவிடுகிறோம்!!
வீடு வீடுக்கு ஆழ்துளை கிணறு போட்ரோம்!!கொடுக்கல் வாங்கல் தேவையில்லாமல் ஆகிவிட்டது!!!அதனால் அந்த குழந்தைகளுக்கு இந்த மாதிரியான உறவுகளுக்கும் வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது!!!இந்த தொழில் நுட்பம் ,நாகரீக வளர்ச்சி எல்லாம் ஏதோ அவர்களுக்கு பெறுவதை விட இழப்பதை அதிகம் செய்திருக்கின்றது..
முகம் பார்த்து நட்புகளை வளர்த்த காலம் போயி முகநூலில் மூழ்கி தேடிக் கொண்டிருக்கும் காலமாகியது...கவிதை சொல்லி காதல் வளர்த்த காலம் போயி கட்செவி அஞ்சலில் ஹாய் சொல்லி பை பை உடன் முடிந்துவிடுகிறது...பக்கத்தில் இருக்க பள்ளிக் கூடம் போக வீடு மாறி போன நிலை மாறி பக்கத்து பக்கத்திலயே பள்ளிகூடங்கள் மரங்களை விட அதிக எண்ணிக்கையில் உதித்திருக்கின்றன .கால்கடுக்க கல்லூரிகள் தேடி ஓடி அலைந்த கால்களை இப்போது வீடு வரை சென்று வாசல்களை திறந்துவிட்டு வரவேற்கின்றன..இரவு எட்டு மணி செய்திகளுக்காக காத்திருந்த நேரம் போயி இருபத்திநான்கு மணி நேர செய்தி சேனல்களில் சிக்கிக் கொண்டோம் ..
காட்சிகளும் மாறுகின்றன..
காலங்களும் மாறுகின்றன!!
எதிர்காலமெல்லாம் நிகழ்காலமாக மாற்றி தெரியக் கூடிய நாட்கள் வெகு தொலைவில் இல்லை..வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் இயந்திரத்தோடு இயந்திரமாக பயணிக்கும் காலம் இன்னும் சிலகாலம் தான்..
ஆம் காலம் மாறுகிறது........
No comments:
Post a Comment